மட்டக்களப்பு கிரான்குளம் கடற்கரைப் பகுதியில் உயிரிழந்த நிலையில் 3 கடல் ஆமைகள் மற்றும் டொல்பின் மீன் ஒன்றும் இன்று சனிக்கிழமை (19) கரையொதுங்கியுள்ளன.
கடந்த 21 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தையண்டிய கடல் பகுதியில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் தீ பரவியதுடன் கடலில் கப்பல் மூழ்கியதையடுத்து பல பிரதேசங்களில் கடற்கரையில் ஆமைகள், டொல்பின் மீன்கள் உயிரிழந்து கரையொதுங்கி வருகின்றன.
இந்த நிலையில் மட்டக்களப்பு கடல் பகுதியில் உயிரிழந்த நிலையில் ஆமைகள், டொல்பின் மீன் கரையொதுங்கியுள்ளன. இது தொடர்பாக மீனவர்கள் உரிய அதிகாரிகளுக்கு அறிவித்தனர்.
இதனையடுத்து அந்தப் பகுதிக்கு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள், கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் உட்பட அதிகாரிகள் பார்வையிட்டதுடன் இறந்த நிலையில் காணப்பட்ட டொல்பின் மற்றும் கடலாமைகளை பகுப்பாய்விற்காக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர்.
இதேவேளை இன்னும் பல ஆமைகள் கடலில் கரையொதுங்கி வருவதாக இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற கரைக்கு திரும்பி வந்தடைந்த மீனவர்கள் தெரிவித்தனர்.
—————–
Reported by : Sisil.L