கொரோனா தொற்றுக்குள்ளான முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர நேற்றுக் காலை காலமானார்.
கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணமடைந்தார்.
இவர் முன்னாள் அமைச்சர் மஹாநாம சமரவீர மற்றும் கேமா பத்மாவதி ஆகியோரின் புதல்வராவார்.
சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து 1983ஆம் ஆண்டு அரசியல் பயணத்தை ஆரம்பித்த இவர், 2007ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டார்.
1989ஆம் ஆண்டில் இருந்து 2020ஆம் ஆண்டு வரை மாத்தறை மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய மங்கள சமரவீர, பல்வேறு அமைச்சுப் பதவிகளையும் வகித்தார்.
1994ஆம் ஆண்டு தபால் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
2004 ஆம் ஆண்டு துறைமுகங்கள், விமான சேவைகள் மற்றும் ஊடக அமைச்சராகவும், 2007ஆம் ஆண்டு வெளிவிவகார அமைச்சராகவும், 2015ஆம் ஆண்டு மீண்டும் வெளிவிவகார அமைச்சராகவும், இறுதியாக நிதி அமைச்சராகவும் செயற்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரை ஆட்சிக்குக் கொண்டுவருவதில், திரையின் பின் நின்று செயற்பட்டவராக மங்கள சமரவீர கருதப்படுகின்றார்.
2020ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி, புதிதாக ஸ்தா பிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து, பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
தேர்தலுக்கு முன்னரே வேட்புமனுவை வாபஸ் பெற்ற அவர், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இறுதியாக, அண்மையில் ‘உண்மையான தேசப்பற்றாளர்’ என்ற இயக்கத்தை ஆரம்பித்து, செயல்பட்டு வந்த நிலையிலேயே மங்கள சமரவீர கொரோனாத் தொற்றுக்குள்ளாகி மரணித்தார்.
இவரின் பூதவுடல் நேற்று மாலை பொரளை பொது மயானத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைவாகத் தகனம் செய்யப்பட்டது.
இறுதிக்கிரியை நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, அமைச்சர்கள் மற்றும் ஆளும்,எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
———–