தம்மை கைது செய்வதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி போதகா் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த ரிட் மனு தொடர்பான ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்காக சட்டமா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
இந்த மனு பரிசீலனைக்கு அழைக்கப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சட்டமா அதிபர் ஷமிந்த விக்ரம, இந்தக் கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பை வௌியிட்டாா்.
அதன்படி, இந்த மனு தொடர்பான ஆட்சேபனைகளை முன்வைக்க எதிர்வரும் 14ஆம் திகதி வரை சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னா் குறித்த மனு மீதான பரிசீலனையை எதிா்வரும் 15 ஆம் திகதிக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டதாக “அத தெரண” செய்தியாளர் தெரிவித்தார்.
போதனை ஒன்றின் போது தாம் வௌியிட்ட கருத்தின் ஊடாக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சாசன சட்டத்தின் கீழ் குற்றம் இழைக்கப்பட்டுள்ளதாக கூறி குற்றப் புலனாய்வு திணைக்களம் தம்மை கைது செய்ய தயாராகி வருவதாக சட்டத்தரணிகள் ஊடாக போதகா் ஜெரோம் பெர்னாண்டோ, நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளாா்.
இதன்படி தம்மை கைது செய்ய தடை விதிக்குமாறு கோரி அவர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
Reported by : S.Kumara