அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்திலுள்ள பொலிஸ் அதிகாரம் பற்றி, பாராளுமன்றத்தில் பகிரங்க விவாதத்தை நடத்தி சகலரும் கூட்டாக ஒரு தீர்மானத்துக்கு வர வேண்டுமென வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
13 ஆவது திருத்தத்திலுள்ளது போன்று ஒவ்வொரு மாகாணங்களுக்கும் பொலிஸ் அதிகாரத்தை பகிர்ந்தால், பின்விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும். இவ்விடயத்தில் தெற்கு மக்கள் உள்ளிட்ட சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நீதியான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதே எங்களின் எதிர்பார்ப்பாகும்.
இவ்விவகாரத்தில் வடக்கு மக்களுடன் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எனவே, பொலிஸ் அதிகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் பகிரங்க விவாதத்தை முன்னெடுத்து சகலரும் கூட்டாக ஒரு தீர்மானத்துக்கு வர வேண்டும்.
பொலிஸ் அதிகாரத்தை மாகாணங்களுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் விளக்கமளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், எமது நாட்டிலுள்ள ஒரு பிரச்சினைக்கு தீர்வுக் காண வேண்டுமென்றால், நாட்டு மக்கள் சகலரும் ஒன்று படவேண்டும்.தெற்கிலுள்ளவர்கள் உம்பட சகலரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நீதியான தீர்வைப் பெற்றுக்கொடுக்கவே நாங்கள் முயற்சிக்கிறோம்.
பொலிஸார் தற்போது அரசியல் மயமாகியுள்ளதாக மக்களே குறிப்பிடுகின்றனர்.
பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான அமைச்சர் இருக்கும்போதே இந்த நிலைமை என்றால், ஒன்பது மாகாணங்களுக்கு ஒன்பது பொலிஸ் பிரிவுகள் உருவாகி 09 முதலமைச்சர்களின் கீழ் பொலிஸ் நிர்வகிக்கப்படும்போது என்ன நடக்கும். இது தொடர்பில் சிந்தித்து பார்க்கவேண்டும்.
எனவே, இதனூடாக தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல முழு நாட்டு மக்களுக்கு என்னவாகப் போகிறது என்பதை சிந்தித்து பார்க்கவேண்டும். எந்தவொரு நாடும் அவர்களுக்கு தேவையான சட்டங்களை அந்த நாட்டிலேயே நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். அதற்காகவே ஒவ்வொரு நாட்டிலும் பாராளுமன்றம் என்றவொரு கட்டமைப்பு இருக்கிறது. இதுதொடர்பில், சகலரும் ஓரிடத்தில் ஒன்றுக்ககூடி கலந்துரையாடி பொதுவான தீர்மானமொன்றுக்கு வரவேண்டும்.
இருந்தபோதும் 13 ஆவது அரசியலமைப்பை பொறுத்தவரையில் பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த எனைய சகல அதிகாரங்களையும் நடைமுறைப்படுத்த, அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
Reported by:S.Kumara