பொருளாதாரத்தை மீட்டெடுப்பதன் மூலம் அடுத்த வருடம் மக்கள் தமது வாக்குகளை பயன்படுத்தி நாட்டில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தி, தாம் விரும்பும் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான சூழல் ஏற்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே தனது முன்னுரிமை எனவும் அதனைச் செய்வதன் மூலம் மக்கள் மீதான சுமை குறைக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனநாயகத்திற்கு நிலையான பொருளாதாரம் அவசியம் எனவும் சட்டம், அமைதி இல்லாமல் அதனை கட்டியெழுப்ப முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பொருளாதாரத்தினை கட்டியெழுப்பி, சட்டம் மற்றும் அமைதியை பாதுகாப்பதாகவும் அவை சீர்குலைய இடமளிக்கப்போவதில்லை எனவும் ஜனாதிபதி மேலும் கூறினார்.
இவ்வருட இறுதிக்குள் ஜனநாயக சமூகத்தினை நாட்டில் உருவாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை மற்றும் மாலைத்தீவுகளை உள்ளடக்கிய ரோட்டரி கழகத்தின் மாவட்ட இலக்கம் 3220 ஏற்பாடு செய்த 32 ஆவது ரோட்டரி மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்விடயங்களை தெரிவித்தார்.
Reported by:Maria.S