நாடு எதிர்க்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தொடர்பில் ஆராய்ந்து பாராளுமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்க பாராளுமன்ற விசேட தெரிவு குழுவை ஸ்தாபிக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, டலஸ் அழகபெரும தரப்பினர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், உட்பட பாராளுமன்றில் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் குறித்த அனைத்து தரப்பினரும் சபாநாயகருக்கு கைச்சாத்திட்டு சமர்ப்பித்துள்ள மனுவில்; நாடு முன்னொரு போதும் இல்லாத வகையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக் கூற வேண்டிய தரப்பினர் தொடர்பில் ஆராய்வது அரசியலமைப்பின் 148ஆவது உறுப்புரையின் பிரகாரம் நிதி அதிகாரம் உள்ள பாராளுமன்றத்துக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது.
1949ஆம் இலக்க 58ஆவது நாணய நிதிச்சட்டத்தின் 64(2),65 மற்றும் 68(1) உறுப்புரைகளின் கீழ் நாணய சபையினால் நிதி அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள வாழ்க்கை செலவு, பணவீக்கம், நாணய விநியோகம், மற்றும் சர்வதேச நாணய பரிமாற்றம் தொடர்பில் அமைச்சர் மற்றும் அரச அதிகாரிகளுக்கான அதிகாரம் என்பன மீறப்பட்டுள்ளதால் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளது, இவ்விடயம் தொடர்பில் ஆராயும் பொறுப்பு பாராளுமன்றத்துக்கு உண்டு.
பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஆராயும் வகையில் நியமிக்கப்படும் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினர் கட்டாயம் அழைக்கப்பட வேண்டும். அத்துடன் உரிய ஆவணங்களும் தெரிவுக்குழுவுக்கு சமர்பிக்கப்பட வேண்டும். அவற்றை பெற்றுக்கொள்ளும் அதிகாரம் தெரிவுக்குழுவுக்கு வழங்கப்பட வேண்டும்.
பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களை நாட்டு மக்களுக்கு அடையாளப்படுத்த வேண்டிய பொறுப்பு பாராளுமன்றத்துக்கு உண்டு.நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் பாராளுமன்றமும் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளது,ஆகவே இவ்விடயத்தில் பாராளுமன்றத்துக்கான பொறுப்பு முறையாக நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
Reported by :Maria.S