பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள மசூதி ஒன்றில் குண்டு வெடிப்பின் காரணமாக குறைந்தபட்சம் 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஷியா பிரிவு மசூதியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 56 பேர் படுகாயமடைந்தனர். இதனை மருத்துவமனை உறுதி செய்துள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு மேற்கே 190 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பெஷாவர் நகரம். கொச்சா ரிசல்டார் என்ற பகுதியில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெறுவதற்கு ஒரு சில மணி நேரத்துக்கு முன்பாக குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோது சம்பவ இடம் அருகே இருந்த ஜாஹீத் கான் இது குறித்து கூறுகையில், “ஒரு நபர் மசூதிக்குள் நுழைவதற்கு முன்பு இரண்டு பொலிஸ்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுடுவதை நான் பார்த்தேன்.சில வினாடிகளுக்குப் பிறகு ஒரு பெரிய வெடிச்சத்தத்தைக் கேட்டேன்” என்றார்.
இதன்படி ராவல்பிண்டியில் பாகிஸ்தான், அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்று வரும் நிலையில், இந்தக் குண்டுவெடிப்பு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக, கடந்த 25 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொள்ளாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Reported by : Sisil.L