பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கு – வடக்கிலிருந்து தெற்கு நோக்கி மாபெரும் போராட்டம் !

பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரையில் மாபெரும் தொடர் போராட்டமும் கையெழுத்து திரட்டும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவுள்ளது.

நாளை காலை 9 மணிக்கு மாவிட்டபுரம், கந்தசாமி கோயிலிலிருந்து ஆரம்பமாகும்  காங்கேசன்துறை தொடக்கம் அம்பாந்தோட்டை வரையாக நடைபெறவுள்ள இந்த நாடு தழுவிய  ஊர்தி வழிப்போராட்டம் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்வதாக அரசாங்கம் கொடுத்த  வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி வலியுறுத்தும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இப்போராட்டம் தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏசுமந்திரன், தமிழரசுக்கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் கி.சேயோன், தொழிற்சங்க மற்றும் வெகுசன அமைப்புக்களின் கூட்டமைப்பின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், 1979ஆம் ஆண்டு, 6 மாதங்களுக்கு ஒரு தற்காலிக ஏற்பாடுகள் சட்டமாக கொண்டுவரப்பட்டு, 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்தும் அமுலிலுள்ள கொடூரமான பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் கையெழுத்து திரட்டும் பிரச்சார  நடவடிக்கையொன்றினை நாம் ஆரம்பித்துள்ளோம். அன்றைய அரசாங்கத்திற்கு எதிரான  அதிருப்தியை நசுக்குவதற்கு இச்சட்டம் பயன்படுத்தப்பட்டதை நாம் கண்டோம்.

இது கடந்த காலங்களில் தொடர்ந்ததைப் போலவே நாளையும் தொடர்கின்றது. குறிப்பாக தற்போது  காலி முகத்திடல் அகிம்சைவழி போராட்டக்காரர்களை கைதுசெய்யவும் இச்சட்டமே  பயன்படுத்தப்படுகின்றது.

ஆகவே அச்சட்டத்தினை நீக்குவதற்காக முன்னெடுக்கப்படும் இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கோரப்படுவதோடு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினை இரத்து செய்வதற்கான மனுவில் கையெழுத்திடுமாறும் வேண்டப்படுகின்றர் என்றுள்ளது.

Reported by :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *