அரசாங்கம் நெல்லை 120 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படும் எனவும், அரிசியின் விற்பனை விலை 220 ரூபா என அறிவிக்கின்றனர். அப்படியானால் மேலதிகமாக உள்ள 100 ரூபா யாருக்கு போகின்றது? எனவே விவசாயிகளின் பிரச்சனைகளை கருத்திற்கொண்டு, சரியான நேரத்தில் சரியான தீர்மானங்களை எடுக்காமல் விட்டால் கடந்த காலத்தில் இந்த நாட்டில் எப்படி பிரச்சனைகள் ஏற்பட்டதோ, அதே போல் பிரச்சனைகள் எதிர்காலத்தில் ஏற்படலாம் என விவசாய அதிகார சபையின் செயலாளர் ஜெயானந்தன் நிறஞ்சனகுமார் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட தேசிய கமக்கார அதிகார சபையின் ஊடக சந்திப்பு இன்று வியாழக்கிழமை (6) மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் அதிகமான பிரதேசங்களில் நெல் அறுவடை இடம்பெற்று வருகின்ற நிலையில், விவசாய பிரதி அமைச்சர் தலைமையில் கொழும்பில் நெல் விலை தொடர்பில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது உலர்ந்த நெல்லின் விலை 120 ரூபாவாக கொள்வனவு செய்வதாக அறிவிக்கப்பட்டது.
இதேவேளை, அரிசியின் விலை 220 ரூபா என அறிவிக்கின்றனர். அப்படியானால் அந்த மேலதிகமான 100 ரூபா யாருக்கு போகின்றது. உண்மையில் அரிசி ஆலை உரிமையாளர்களின் செலவை சேர்த்தால் 158 ரூபாதான் செலவாகப் போகின்றது. இலாபத்தையும் சேர்த்து பார்த்தால் 175 ரூபா தான் செலவாகப் போகின்றது. ஆனால் கிட்டத்தட்ட 40 ரூபா யாருக்கு போகின்றது என தெரியாத நிலையே உள்ளது.
அத்துடன் இந்த விவசாயத்தில் ஈடுபடுகின்ற விவசாயிக்கு இதில் ஒரு ரூபா கூட இல்லை. அதேபோல அரிசி பாவனையாளர்களுக்கும் ஒரு ரூபா கூட கிடைக்கவில்லை இந்த 40 ரூபா யாருக்கு போகின்றது எனவே இதற்கு தீர்வு காணப்படவேண்டும்
அது மட்டுமல்லாது இந்த வருடம் நாடு முழுவதும் பாரிய வெள்ளத்தினால் விவசாயிகள் பல தடவைகள் நட்டமடைந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கும் போது இந்த அரசாங்கத்தை நம்பித்தான் மக்கள் வாக்களித்து ஆட்சிக்கு கொண்டு வந்தார்கள்.
ஆனால் விவசாயிகளின் பிரச்சனைகளை கருத்திற்கொண்டு விவசாய உள்ளீடுகளுக்கான விலையினை குறைக்காது நெல்லின் விலையையும் அரிசியின் விலையையும் குறைக்க வேண்டும் என்றால் எப்படி விவசாயத்தை செய்ய முடியும். விவசாயிகளின் வீட்டில் இருந்து கொண்டு வந்தா கொட்டுவது எனவே அரசாங்கம் விவசாயிகளை கருத்தில் கொண்டு உளளீடுகளின் விலையை குறைக்கவேண்டும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை காப்புறுதி நிறுவனங்கள் பார்வையிடவில்லை. வோளாண்மை அறுவடை முடியப் போகின்றது இதனை வைத்து காப்புறுதியையும் இல்லாமல் செய்யும் செயல்பாடே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
எனவே, எதிர்காலத்தில் அரசாங்கம் விவசாயிகளின் கருத்துக்களை கொண்டு சரியான தீர்மானங்களை சரியான நேரத்தில் எடுக்காமல் விட்டால் கடந்த காலத்தில் இந்த நாட்டில் எப்படி பிரச்சனைகள் ஏற்பட்டதோ, அதே போல் பிரச்சனைகள் எதிர்காலத்தில் ஏற்படலாம் என்பதையும் விவசாயிகள் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றோம். என்றார்.