இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 14 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் 12 தமிழக மீனவர்கள் 3 படகுகளுடன் கைது செய்யப்பட்டதுடன், 28 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் 2 படகுகளுடன் மேலும் 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த 26 மீனவர்களில் 04 பேர் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த 08 ஆம் திகதி விடுவிக்கப்பட்டிருந்தனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஏனைய 22 இந்திய மீனவர்கள் தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அவர்களில் ஒருவர் 2022 ஆம் ஆண்டு எல்லை தாண்டி மீன் பிடித்தமைக்காக கைது செய்யப்பட்டு, ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தமை தெரியவந்தது.
ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனைக் காலத்தில் மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடித்ததால், அவரை சிறையிலடைக்குமாறு நீதவான் ஜே.கஜநிதிபாலன் உத்தவிட்டார்.
முன்னர் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்திற்காக 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது வழங்கப்பட்ட 18 மாதங்கள் சிறைத்தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க மீனவர் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, அதனை 6 மாதங்களாகக் குறைத்து மொத்தமாக 24 மாதங்கள் சாதாரண சிறைத்தண்டனை விதித்த நீதவான் அந்த மீனவரை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார்.
ஏனைய 21 மீனவர்களுக்கும் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சாதாரண சிறைத்தண்டனை விதித்து நீதவான் ஜே.கஜநிதிபாலன் அவர்களை விடுதலை செய்தார்.
Reported by:S.Kumara