நீர்வேலியில் வீட்டினுள் புகுந்து தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 31 பேரில் 06 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 31 பேரையும் மல்லாகம் நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
22 முதல் 35 வயதிற்கு இடைப்பட்ட 6 இளைஞர்களே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 25 பெண்களும், தலா ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நீர்வேலியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான இரண்டு இளைஞர்களும் விளக்கமறியல் உத்தரவின் கீழ், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்வேலி- சிறுப்பிட்டி பகுதியில் வீட்டினுள் புகுந்து தாக்குதல் நடத்தியமை தொடர்பில் சிலர் நேற்று (29) கைது செய்யப்பட்டனர்.
குறித்த பகுதியிலுள்ள இளம் பெண்களின் முகங்களை வௌிநாட்டு பெண்களின் நிர்வாண படங்களுடன் இணைத்து சமூக வலைத்தளங்களின் ஊடாக பகிர்ந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் முன்னதாக பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
முறைப்பாடு செய்யப்பட்ட வீட்டிற்கு அருகாமையில் உள்ள, இளைஞர் ஒருவரின் வீட்டிற்கு 150-க்கும் மேற்பட்டோர் சென்று தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
அவர்கள் இளைஞரை தாக்கியதுடன், அவரது மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தி, வீட்டிற்கு தீ வைத்து எரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் இளைஞரை மீட்டுள்ளனர்.
இதன்போது, பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மீதும் அங்கிருந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
கூட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸார் இதன்போது வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்திய பிரதேசவாசிகள் பின்னர் அருகில் இருந்த வீடொன்றை சேதப்படுத்தியதோடு, அங்கிருந்த சிறிய ட்ரக் வண்டிக்கும் தீ வைத்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
Reported by :S.Kumara