நாட்டின் முழுமையான பொருளாதார மீட்சி இன்னும் உறுதி செய்யப்படவில்லை: IMF பிரதிநிதிகள் குழு தெரிவிப்பு

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட  கடன் வசதி  தொடர்பான முதலாவது மீளாய்வு குறித்த கலந்துரையாடலுக்காக  சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு கொழும்பில் இன்று (27) கூடியது. 

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)  பிரதிநிதிகள் குழுவுடன் இலங்கை அதிகாரிகள் செப்டம்பர் 14 ஆம் திகதி முதல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். 

இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று மாலை இலங்கை மத்திய வங்கியில் ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது. 

இந்த சந்திப்பில் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுவர்  Peter Breuer மற்றும் Katsiaryna Svirydzenka ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். 

இதன்போது, நாட்டின் ஸ்திரத்தன்மைக்கான ஆரம்ப அறிகுறிகள் இருந்தபோதிலும், முழுமையான பொருளாதார மீட்சி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் மீளாய்வுக் குழு தெரிவித்தது.  

எவ்வாறாயினும், இலங்கை மக்கள் பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்து தற்போது மீண்டு வருவதாகவும், கடினமான, மிகவும் தேவையான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை பாராட்டத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும்  Peter Breuer இதன்போது தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டு செப்டம்பரில் பணவீக்கம் 70 சதவீதத்தை விட அதிகமாக இருந்த போதிலும், 2023 செப்டம்பரின் இதுவரையில் பணவீக்கம் 2 சதவீதம் வரை  குறைவடைந்துள்ளதாக அவர் கூறினார்.  

இந்த ஆண்டு மார்ச் தொடக்கம் ஜூன் மாத காலத்தில் மொத்த சர்வதேச கையிருப்பு 1.5 பில்லியன் டொலர் வரையில் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 

பொருளாதார ஸ்திரத்தன்மை தென்படுகின்ற போதிலும் முழுமையான பொருளாதார ஸ்திரத்தன்மை இதுவரை உறுதி செய்யப்படவில்லை எனவும் Peter Breuer தெரிவித்தார். 

அரசாங்கம் கட்டமைப்பு சீர்திருத்தங்களில் அதிகளவான  முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாகவும், புதிய மத்திய வங்கிச் சட்டம் மற்றும் ஊழல் எதிர்ப்பு சட்டம் உட்பட பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய சட்டங்கள் திறம்பட நடைமுறைப்படுத்தப்பட்டால், நிர்வாகத்தை மேம்படுத்த முடியு எனவும் அவர் குறிப்பிட்டார். 

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச கடன் வழங்குனர்களுடன் கலந்துரையாடல்களை  முன்னெடுப்பதன் மூலம் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதில் அதிகாரிகள் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி  Peter Breuer மேலும் குறிப்பிட்டார். 

Reported by :S.Kumara

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *