ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள லண்டன் நகரில் கடுமையான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது கல்வீச்சுத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கனடாவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த மாதம் அறிவித்தார். அதன்படி வரும் 20ஆம் திகதி அங்கு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடு முழுவதும் சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
ஆனால் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கும் உத்தரவுகள் மற்றும் பிற கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் நடத்திவரும் போராட்டங்களால் ஜஸ்டின் ட்ரூடோவின் தேர்தல் பிரசாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் ஒன்ராறியோ மாகாணத்தில் ஜஸ்டின் ட்ரூடோ பிரசாரம் செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில், பிரசாரம் நடைபெற இருந்த இடத்தில் போராட்டக்காரர்கள் திரண்டு அவருக்கு எதிராக கண்டனக் கோஷங்களை எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஜஸ்டின் ட்ரூடோ தனது பிரசாரத்தை ரத்து செய்து விட்டு திரும்பிச் சென்றார்.
இந்த நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள லண்டன் நகரில் பிரசாரத்தை முடித்துவிட்டு தனது வேனில் ஏறிய போது அங்கு திரண்டிருந்த போராட்டக்காரர்கள் கற்களையும், குப்பைகளையும் அவர் மீது வீசினர். அதில் சில கற்கள் ஜஸ்டின் ட்ரூடோவின் தோள்பட்டையில் விழுந்தன.
இதைத் தொடர்ந்து அவரது பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக வேனில் ஏற்றி அங்கிருந்து அழைத்துச் சென்றனர். எனினும் இந்தக் கல்வீச்சில் அவருக்கு பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
——————-
Reported by : Sisil.L