தேயிலை நுகர்வை குறைக்குமாறு  பாகிஸ்தான் அரசு  மக்களை வலியுறுத்தல்

பாகிஸ்தான் மக்கள் நாளாந்தம் தேநீர் அருந்துவதைக் குறைக்குமாறு பாகிஸ்தான் அரசு அழைப்பு விடுத்துள்ளது. வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக தேயிலை நுகர்வைக் குறைக்க பாகிஸ்தான் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


பாகிஸ்தான் அரசாங்கத்தின் கூற்றுப்படி, ஒவ்வொரு நபரும் நாளாந்தம் உட்கொள்ளும் தேநீர் கோப்பைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் தேயிலை இறக்குமதிக்கான செலவைக் குறைக்க முடியும். பாகிஸ்தான் தேயிலையை கடன் அடிப்படையில் இறக்குமதி செய்கிறது. எனவே, தேநீர் அருந்துவதை ஒரு நாளைக்கு இரண்டு கோப்பையாகக் குறைக்குமாறு பாகிஸ்தான் அரசு தனது குடிமக்களை வலியுறுத்துகிறது.


பாகிஸ்தான் கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடியைச் சந்தித்து வருவதாகவும், தற்போதுள்ள அந்நியச் செலாவணி கையிருப்பு இரண்டு மாதங்களுக்கும் குறைவாகவே இருக்கும் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனவே, இறக்குமதி செலவினங்களை முடிந்தவரை குறைத்து அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிப்பதை பாகிஸ்தான் அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.


இதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் அரசாங்கம் தேயிலை இறக்குமதிக்கான செலவினங்களைக் குறைக்கப் பார்க்கிறது.  கடந்த ஆண்டு மட்டும் தேயிலை இறக்குமதிக்காக பாகிஸ்தான் 600 மில்லியன் டொலருக்கு மேல் செலவிட்டுள்ளது.


இதேவேளை, மின்சார நுகர்வு மற்றும் மின் கட்டணத்தைக் குறைக்கும் வகையில் வர்த்தக சமூகத்தினர் இரவு 8:30 மணிக்கு மேல் கடைகளை மூடுமாறு பாகிஸ்தான் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
————–
Reported by:Anthonippillai.R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *