தாய்லாந்து நாட்டின் பாட்தலங் மாகாணத்தில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் போது துள்ளிக் குதித்த மீன் ஒன்று தூண்டில் போட்டவரின் தொண்டைக்குள் சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து நாட்டின் பாட்தலங் மாகாணத்தில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் ஆர்வத்தில் நபர் ஒருவர் சென்றுள்ளார். இதற்காக நீரில் தூண்டிலை போட்டு விட்டு காத்திருந்து உள்ளார். அவரது தூண்டிலில் மீன் சிக்குவதற்கு முன், நீரில் துள்ளி குதித்தபடியே வந்த மீன் ஒன்று, அந்த மனிதரின் தொண்டைக்குள் விழுந்துள்ளது.
5 அங்குல நீளம் கொண்ட அந்த மீன் அவரது மூக்கு வழியே வெளியேற முயற்சித்து முன்னேறி உள்ளது. ஆனால், குறுகலான பகுதியில் அதனால் வெளியே வர முடியவில்லை. தொண்டைக்கும், சுவாச குழிக்கும் இடையில் அந்த மீன் சிக்கி கொண்டது. இதனால், பிராணவாயு செல்லும் வழி அடைப்பட்டது. இதில் திணறி போன அந்த நபர் தொண்டையை இறுக பிடித்துக் கொண்டார்.
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு எக்ஸ்-ரே எடுத்து பார்க்கப்பட்டது. மீன் சிக்கி இருந்த சரியான இடம் கண்டறியப்பட்டு, அவசரகால அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இதுபற்றி மருத்துவமனையின் அதிகாரி செர்ம்ஸ்ரீ பாத்தோம்பனிகிராட் கூறும்போது, நீரில் இருந்து துள்ளி குதித்து ஒருவரின் தொண்டையில் மீன் சிக்கிய சம்பவம் நடப்பதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு.
இதற்கு முன் இது போன்ற விடயங்களை நான் கேள்விப்பட்டதே இல்லை. எங்களது நோயாளியின் உறுப்புகள் எதுவும் பாதிக்கப்படாத வகையில் மருத்துவர்கள் செயல்பட்டனர். அவரைக் காப்பாற்றி விட்டனர் எனக் கூறியுள்ளார்.
——————-
Reported by:Anthonippillai.R