டீசல் தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சேவையில் ஈடுபடும் பஸ்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
திங்கட்கிழமை முதல் இரண்டு வார காலத்துக்கு மூன்றில் ஒரு பங்கு பஸ்கள் மாத்திரமே இயங்கும் என சங்கத்தின் தலைவரான கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபையின் ஊடாக அவர்களுக்கு டீசல் வழங்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்டதாகவும், இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் இருப்பதால், சேவைகளை மட்டுப்படுத்த வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த விநியோக செயல்முறையில் பல சிக்கல்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
6,000 பஸ்கள் மாத்திரமே இயக்கப்படும் என்றும், அதற்கேற்ப பஸ் நேர அட்டவணையைத் தயாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பெறுமதி சேர் வரி அதிகரிப்பு மற்றும் பஸ் தொழிற்துறையில் ஏற்படும் பாதிப்புகள் காரணமாக திங்கட்கிழமை சேவையிலிருந்து விலகுவதாக பஸ் நடத்துனர்கள் முன்னர் அறிவித்திருந்தனர்.
திங்கட்கிழமை புதிய தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதால், இந்தத் தீர்மானத்தை இடைநிறுத்த தீர்மானித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
——————————
Reported by:anthonippillai.R