2019 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் காரணமாக நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்தமையால், நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில், குறித்த காலப்பகுதியில் எடுக்கப்பட்ட தவறான மற்றும் மிகவும் மோசமான தீர்மானங்கள் தொடர்பில் தற்போது தகவல்கள் வௌியாகி வருகின்றன.
பொருளாதாரம் சீர்குலையும் வகையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் காரணமாக, அரசியலமைப்பின் 12/1 இல் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சமமான வாய்ப்பு பெறும் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக நீதியரசர்கள் குழாம் தீர்ப்பு வழங்கியது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ், முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஸ மற்றும் பசில் ராஜபக்ஸ அவ்வேளையில் ஜனாதிபதியின் செயலாளரகவிருந்த P.B.ஜயசுந்தர, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட 7 தரப்பினர் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இருந்த சந்தர்ப்பங்களை கோட்டாபய ராஜபக்ஸ தவறவிட்டுள்ளதாக உயர் நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு சர்வதேச நாணய நிதியம் அனுமதித்த, 1.5 பில்லியன் டொலர் கடன் வசதியின் இறுதி தவணையை பெற்றுக்கொள்வதற்கு செயற்படாமை மற்றுமொரு முக்கிய விடயமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
160 மில்லியன் டொலருக்கும் அதிக தொகையை இறுதி தவணையாக 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பம் காணப்பட்டது.
இந்த கடன் வசதியை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை அவ்வேளையில் அடைந்திருந்த மீளாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் திருப்தி அடைந்திருந்ததாகவும் நீதிமன்ற தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசாங்கம் அவர்களுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவதற்கு தயார் என கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர், அதாவது 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் 19 ஆம் திகதி, அவ்வேளையில் நிதி அமைச்சராக இருந்தவரும் மத்திய வங்கியின் ஆளுநரும் சர்வதேச நாணய நிதியத்திற்கு எழுத்து மூலம் தெரிவித்திருந்தனர்.
எனினும், 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமாகும் போது, ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் அந்த இறுதி தவணையை பெற்றுக்கொள்வதற்கு எவ்வித முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை.
இந்நிலையிலேயே சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடாமலும் ஆலோசனைகளை பெறாமலும் பாரிய வரித்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் திகதிக்கும், பெப்ரவரி 07 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், கடன் தவணையை வழங்குவதற்கான மதிப்பீடுகளை மேற்கொண்டிருந்த சூழ்நிலையில், அவ்வேளையில் ஆட்சியிலிருந்த அரசாங்கம் இந்த செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது.
இதேவேளை, 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 08 ஆம் திகதி அவ்வேளையில் ஜனாதிபதி செயலாளராகவிருந்த கலாநிதி P.B.ஜயசுந்தர சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த கடன் தவணையை அவசர நிதி வசதியாக மாற்றி வழங்குமாறு அவர் அந்த கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
COVID தொற்று காரணமாக பொருளாதாரத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பொருளாதார அபிவிருத்தியில் சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
அத்துடன், பெருந்தொகை நிதியை செலுத்த வேண்டியேற்பட்டுள்ளதாகவும் கலாநிதி P.B.ஜயசுந்தர சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளருக்கு அறிவித்துள்ளார்.
ஜப்பான், சீனா, உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகிய பங்காளர்களிடம் இலங்கை உதவிகளை கோரியுள்ளதாகவும் P.B.ஜயசுந்தர அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கலாநிதி P.B. ஜயசுந்தரவின் கடிதத்திற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் வலய தலைமை அதிகாரி பதில் வழங்கியிருந்தார்.
இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க தாம் இணங்குவதாகவும், P.B. ஜயசுந்தரவின் கோரிக்கையை ஆராய்வதற்கு குறிப்பிட்ட காலம் அவசியமாகும் எனவும் அவர் கூறியிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதன் பின்னர் அவசர நிதி வசதியை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதனை உறுதிப்படுத்தும் எந்தவொரு ஆவணத்தையும் கணக்காய்வாளர் நாயகத்தினால் கண்டுபிடிக்க முடியவில்லை என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடன் தவணையை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கு எடுத்த தீர்மானம் தவறானது எனவும் தான்தோன்றித்தனமானது எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் 160 மில்லியன் டொலருக்கும் அதிக தொகையை பெறாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுத்தது யார்?
Reported by:S.Kumara