கைது செய்யப்பட்ட கடுவலை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன மற்றும் சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல ஆகியோர் தற்போது பொலிஸ் பாதுகாப்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் இவர்கள் இருவரும் நேற்று (10) தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலங்கம, கொஸ்வத்த சமகி மாவத்தை பிரதேசத்தில் இரு தரப்பினரின் தாக்குதலினால் சமூக ஊடக செயற்பாட்டாளர் ஒருவர் காயமடைந்து தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டதன் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடுவலை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் மற்றும் இரண்டு கார்களில் வந்த சிலர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சமூக ஊடக செயற்பாட்டாளரையும் அவரது காரையும் அந்த குழு தாக்கியுள்ள நிலையில், காயமடைந்த நபர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணையின் போது முன்னாள் மேயரும் தாக்கப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, அவரும் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
எவ்வாறாயினும், இரு தரப்பினர் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரும் தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதற்கமைய, சமூக ஊடக செயற்பாட்டாளர் தற்போது தேசிய வைத்தியசாலையிலும், முன்னாள் மாநகர மேயர் முல்லேரிய வைத்தியசாலையிலும் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார்.தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Reported by :Maria.S