தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது அவசியம். இருப்பினும், இதுவரையில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் ஏதும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண உரிய நடவடிக்கைகளை முன்னெடுக் கவில்லை.
புதிய அரசமைப்பு ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் வலியுறுத்தியுள்ளோம். ஆரம்பத்தில் செயல் திறனுடன் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசமைப்பு உருவாக்கத்திற்கான நடவடிக்கைகள் தற்போது மந்த கரமான முறையில் உள்ளன என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் இனங்களுக்கிடையில் பிரச்சினை உள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக தமிழ் மக்களின் அரசியல் பிரச்னைக்குத் தீர்வு புதிய அரசமைப்பின் ஊடாக வழங்கப்பட வேண்டும். மாகாண சபை பலப்படுத்தப்பட வேண்டும். இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் 2005 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலத்தில் அப்போதைய ஜனாதிபதியாக பதவி வகித்த தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் ‘சர்வ கட்சித் தலைவர் மாநாடு ‘ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இருப்பினும் இதுவரையில் அவ்வறிக்கை செயற்படுத்தப்படவில்லை. அந்த அறிக்கையின் உள்ளடக்கங்களை தமிழ் – முஸ்லிம் கட்சிகளும் ஏற்றுக் கொண்டன – என்றார்.
———————
Reported by : Sisil.L