டொலர் செலுத்தப்பட்டதையடுத்து கப்பலிலிருந்து டீசலை இறக்கும் பணி  ஆரம்பம்

கொழும்பு துறைமுகத்தில் 37,300 மெட்ரிக் தொன் டீசலுடன் தரித்து நிற்கும் சிங்கப்பூர் நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பலிலிருந்து டீசலை இறக்கும் பணி நேற்று ஆரம்பமானது.

 
சிங்கப்பூர் நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டி 31 மில்லியன் அமெரிக்க டொலர் நேற்று செலுத்தப்பட்டது. இதனையடுத்து டீசலை இறக்கும் பணி ஆரம்பமானது.

 
நாட்டில் டீசலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் தற்போது இறக் கப்படும் டீசல் ஒரு வாரத்துக்கு போதுமானதென தெரிய வருகிறது.

 
இதேவேளை, டீசலை ஏற்றிய மேலும் இரு கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன. இவற்றில் ஒரு கப்பலில் 33,000 மெட்ரிக் தொன் ஒட்டோ டீசலும் 7,000 மெற்றிக் தொன் சுப்பர் டீசலும் உள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர். ஒல்கா தெரிவித்தார்.

 

 மற்றைய கப்பலில் 28,000 மெற்றிக் தொன் டீசல் மற்றும் 9,000 மெற்றிக் தொன் விமானத்துக்கான எரிபொருள் காணப்படுவதாகவும் அமைச்சின் செயலாளர் கூறினார்.

 
இதேவேளை, நாட்டில் தற்போது போதுமான பெற்றோல் கையிருப்பில் உள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
எண்ணெயை ஏற்றிய மேலும் இரு கப்பல்கள் எதிர்வரும் 6 ஆம் 7 ஆம் திகதிகளில் நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர். ஒல்கா குறிப்பிட்டார்.

 
இதேவேளை, இலங்கைக்கு எரி பொருள் ஏற்றி வரும் எந்தவொரு கப்பலும் நிராகரிக்கப்படவில்லை என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

 
இதுவரை நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து எரிபொருள் கொள்கலன் மாதிரிகளும் முறையான சோதனை நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

 
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடமும் இது தொடர்பில் வினவியதாகவும் மாதிரி எதுவும் நிராகரிக்கப்படவில்லை எனவும் உறுதிப்படுத்தியுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் கூறினார்.
——-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *