இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இன்று ஜெனிவாவுக்கு பயணிக்கவுள்ளார்.
உலக நாடுகளின் தொழிற்சங்கங்கள் பங்கேற்கும் சர்வதேச தொழிற்சங்க மாநாட்டில் பங்கேற்பதற்காகவே அமைச்சர் ஜெனிவா செல்கிறார்.
ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை இந்த கூட்டம் நடைபெறும்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி, அமைச்சரின் ஆலோசகர் ஹரித்த விக்ரமசிங்கவும் அமைச்சரின் விஜயத்தில் பங்கேற்கின்றனர்.
அமைச்சர் ஜீவன் தொண்டமான், சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளரையும் இந்த விஜயத்தின் போது
சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
அத்துடன், ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.
‘மலையகம் – 200’ நிகழ்வு தொடர்பாகவும் சர்வதேச சமூகத்திற்கு இதன்போது தெளிவுபடுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reported by :N.Sameera