சுனாமி தாக்கத்தின் பின் டோங்கா தீவில் முதலாவது விமானம் தரையிறங்கியது

பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள டோங்கா நாட்டுக்குத் தேவையான தண்ணீர் மற்றும் பொருட்களை ஏற்றிக்கொண்டு முதலாவது வெளிநாட்டு உதவி விமானம் டோங்காவை சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


அந்த விமான நிலைய ஓடுபாதையில் இருந்து சாம்பலை ஊழியர்கள் அகற்றிய பிறகு, நியூஸிலாந்தின் இராணுவ விமானம் தரையிறங்கியதாக அதன் அதிகாரிகள் தெரிவித்தனர்.


அதேசமயம் சுனாமியால் பாதிக்கப்பட்ட டோங்காவை நோக்கி நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அனுப்பிய பிற விமானங்கள் மற்றும் கப்பல்கள் சென்று கொண்டிருக்கின்றன.


பசிபிக் பிராந்தியத்தில் கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்பு மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட சுனாமி அலையால் டோங்கா தீவின் பல பகுதிகள் சாம்பலால் மூழ்கின. சாம்பல் மற்றும் கடல் நீர் புகுந்ததால் தீவுக்கான குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.


எங்கும் அசுத்தமான நீர் நிறைந்திருக்கிறது. அங்கு இதுவரை குறைந்தபட்சமாக மூன்று பேர் இறந்துள்ள நிலையில் தகவல் தொடர்புகளும் முடங்கியுள்ளன, மேலும் உலகின் பிற பகுதிகளிலிருந்து ஐந்து நாட்களுக்குத் துண்டிக்கப்பட்டிருந்த டோங்கா தற்போதுதான் அதன் உலகளாவிய தொடர்பை மீண்டும் நிறுவத் தொடங்கியுள்ளது.


இதேவேளை முன்னதாக, தலைநகர் நுகுஅலோபாவில் உள்ள விமான நிலைய ஓடுபாதையை அடர்த்தியான சாம்பல் படலம் மூடியதால் விமானங்கள் தரையிறங்குவது தடைப்பட்டிருந்தது. அந்த நிலை தற்போது சீர்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

———————————Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *