னாவுக்கு சொந்தமான Shi Yan 6 ஆய்வுக் கப்பல் ஒக்டோபர் மாதத்தில் நாட்டின் கடற்பரப்பிற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என வௌியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
சர்வதேச செய்தி ஊடகமொன்றுக்கு அமைச்சர் அலி சப்ரியினால் கடந்த திங்கட்கிழமை (25) வழங்கப்பட்ட நேர்காணலை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் இந்த செய்தியை வௌியிட்டுள்ளன.
பாதுகாப்பு தொடர்பான இந்தியாவின் கரிசனை இலங்கைக்கும் முக்கியமானது என வௌியுறவு அமைச்சர் அலி சப்ரி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளின் இணக்கப்பாட்டுடன் உருவாக்கப்பட்ட, நிலையான செயற்பாட்டு நடைமுறைகளுக்கு அமைவாக, கடல்சார் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கைக்கு எவ்வித சிக்கலும் காணப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Shi Yan 6 ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு வருவது தொடர்பில் இந்தியாவிற்கு காணப்படும் தொடர்ச்சியான கரிசனைகள் இலங்கைக்கு மிகவும் முக்கியமானவை என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளதுடன், இலங்கையை மோதல்களற்ற பிராந்தியமாகப் பேணுவதற்கான தேவை காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ள சீனாவின் Shi Yan 6 ஆய்வுக் கப்பல் கடந்த 20 ஆம் திகதி இந்து சமுத்திரத்திற்குள் பிரவேசித்திருந்தது.
இந்த ஆய்வுக் கப்பல் 12,000 கடல் மைல்களுக்கும் அதிகமான கடற்பரப்பை உள்ளடக்கி பயணிக்கவுள்ளதுடன், 13 ஆராய்ச்சிக் குழுக்கள் மற்றும் 28 அறிவியல் ஆய்வுத் திட்டங்களுடன் கடலில் 80 நாட்கள் செயற்படவுள்ளதாகவும் சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த கப்பல் இந்து சமுத்திரத்தில் பல்வேறு வகையான ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக ஆய்வு நடவடிக்கையின் பிரதான நிபுணர் சீன ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, Shi Yan 6 ஆய்வுக் கப்பல் ஒக்டோபர் 25 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பை வந்தடையும் என இலங்கை கடற்படை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Reported by :S.Kumara