சிறைகளிலுள்ள முன்னாள் போராளிகளுக்கு நீதி வழங்க வேண்டும் : அமைச்சர் நாமல்

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு  நீதி கிடைக்க வேண்டும். அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை  துரிதப்படுத்த வேண்டுமென  இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
நாமல் ராஜபக் ஷ சபையில் வலியுறுத்தினார்.

நேற்று அவர் பாராளுமன்றில் ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்தவை வருமாறு: வழக்குகளில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் வழக்குகளை நிறைவு செய்ய முடியாததால் பல இளைஞர்கள் இன்று சிறைச் சாலைகளில் மிக நீண்ட காலமாக இருக்கின்றனர்.

 
குறிப்பாக   விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதானவர்கள் பல வருடங்களாக சிறைச்சாலைகளில் உள்ளனர்.  நல்லாட்சியின் போது நானும் சிறையில் அடைக்கப்பட்டேன். அதன்மூலம் சிறைச்சாலைகளில் உள்ள நிலவரத்தை என்னால் நன்றாக அறிய முடிந்தது. சிறைச்சாலைகளில்
அடைக்கப்படுபவர்கள் எவ்வாறு துன்பப்படுவார்கள் என்பதை கற்பதற்கான சூழ்நிலையை நல்லாட்சி அரசே எனக்கு வழங்கியது என இன்றும் என் தந்தையிடம் நான் கூறுவேன்.


புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில், வழக்கு விசாரணை முடிவடைந்து தண்டனை அனுபவிப்பவர்களின் எண்ணிக்கை 35 ஆகும். இந்த 35 பேரிலும் பெரும்பாலான வர்கள், தமக்கு கிடைக்கப்பெற்றுள்ள தண்டனைக் காலத்தை விடவும், அதிக வருடங்களை சிறைகளில் கழித்துள்ளனர். அத்துடன், மேலும் 38 பேருக்கு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தொடர்பான வழக்குகள்கூட 20 வருடங்களாக நடைபெற்றுள்ளன. இவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில்தான் வழக்கு விசாரணை தொடரும். அதேபோல வழக்கு விசாரணை எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள வர்களின் எண்ணிக்கை 13 ஆகும். வழக்கு விசாரணை முடிவடைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத
116 பேரும் சிறைகளில் இருக்கின்றனர்.


இவ்வாறு சிறைகளில் இருப்பவர்களுக்கு  தவறான வரலாறு இருந்திருக்கலாம். சிலர் தெரியாமல் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்.
ஆனால் அவர்கள் பல வருடங்களாக சிறைகளில் உள்ளனர். இவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். எனவே, ஒன்று வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை வழங்கப்பட வேண்டும்.  அவ்
வாறு இல்லாவிட்டால்  அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.


உதாரணமாக  கொலைக் குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரின் கதையைக்கேட்டபோது, மரக்கிளையொன்றை வெட்டியதால் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் திட்டம் வகுத்த பிரதான சந்தேக நபர் பொது மன்னிப்பு வழங்கி வீட்டுக்கு  அனுப்பப்பட்டுள்ளார். கிளை வெட்டியவர்
குற்றவாளியாக உள்ளே இருக்கின்றார்.


எனவே, 12,500 பேருக்கு புனர்வாழ்வளித்து அவர்களில் 3500 பேரை சிவில் பாதுகாப்பு படையணியில் இணைக்க முடியுமென்றால், சிறைகளில் நீண்ட காலமாகவுள்ள இவர்களுக்கு  நீதி கிடைப்பது பற்றியும் கவனம் செலுத்தப்படவேண்டும் என்றார்.
—————-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *