சிறுகதைகள் மூலம் புகழ் பெற்ற ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் (வயது 72) நேற்று காலை திருகோணமலையில் காலமானர்.
யாழ்ப்பாணம் – தென்மராட்சி – மட்டுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர் கல்வியின் பின்னர் இள வயதிலேயே இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வாலிப சங்க இயக்கத்தில் இணைந்து செயற்பட்டார். அத்துடன் இலக்கியம், சமூக செயல்பாடுகளிலும் தீவிர ஈடுபாடு காட்டினார். 1967ஆம் ஆண்டு எழுத்துத் துறையில் தடம்பதித்த அவர் கவிதை, சிறுகதை, நாவல், பத்தி, விமர்சனக்கட் டுரை ஆகிய துறைகளில் ஆளுமையாளராக இருந்தார். அவருடைய பத்தி எழுத்துக்கள் மற்றும் கட்டுரைகள் சில வ.தேவ சகாயம், தாவீது கிறிஸ்ரோ ஆகிய பெயர்களிலும் வெளிவந்துள்ளன. இவரின் படைப்புகள் ஈழ நாடு, சிந்தாமணி, வீரகேசரி, தொழிலாளி, சுதந்திரன், ஈழ முரசு வார இதழ்களிலும் தாய கம், மல்லிகை, வாகை, அலை, புதுசு, இதயம், ஒளி ஆகிய சஞ்சிகைகளிலும் வெளியாகியுள்ளன.
2012 ஆம் ஆண்டிலிருந்து ‘தரம் 10 தமிழ்மொழியும் இலக்கியமும்’ என்ற பாட நூலில் ‘நந்தினி சேவியர் சிறுகதைகள்’ என்ற முருகையனின் கட்டுரை சேர்க்கப்பட்டுள்ளது.
———————–
Reported by : Sisil.L