எதிர்வரும் 10 ஆம் திகதி வரை காலி முகத்திடல் கோட்டா கோகம போராட்டக்களத்தில் உள்ள சட்டவிரோத கூடாரங்கள் உரிய சட்ட நடவடிக்கைகளின்றி அகற்றப்படுவதை தடுப்பதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு உறுதி வழங்கியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்குத் தேவையான ஆலோசனைகளை விரைவில் வழங்குவதாகவும் சட்டமா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன அறிவித்துள்ளார்.
எனினும், குறித்த காலப்பகுதிக்குள் சட்டவிரோத கூடாரங்களை அகற்றுவது தொடர்பான ஆரம்பக் கட்ட சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பிரதிவாதிகளுக்கு எவ்வித இடையூறுகளும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டக்களத்திலிருந்து சுயவிருப்பின் பேரில் வெளியேற விரும்பும் நபர்களுக்கு, இந்த இணக்கப்பாட்டினால் எவ்வித இடையூறுகளும் ஏற்படாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
காலி முகத்திடல் போராட்டக்களத்திலிருந்து இன்று மாலை 05.00 மணிக்கு முன் வெளியேற வேண்டுமென பொலிஸாரால் விடுக்கப்பட்ட பணிப்புரையை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபரால் இந்த உறுதியுரை வழங்கப்பட்டது.
Reported by :Maria.S