அமெரிக்காவைச் சேர்ந்த மெர்க் நிறுவனம் தயாரித்துள்ள மாத்திரை கொரோனா வைரஸிற்கு எதிராக சிறப்பான செயல்திறனைக் கொண்டுள்ளது எனத் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து சந்தையில் அந்நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்துள்ளது.
மெர்க் நிறுவனம் தயாரித்துள்ள மால்னுபிராவிர் மாத்திரையை உட்கொண்டால் கொரோனா தொற்று பாதிப்பால் மரணம் ஏற்படும் வாய்ப்பு பெருமளவு குறைவதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படக் கூடிய நிலை கூட பலருக்கு ஏற்படாது எனவும் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த முடிவுகள் மிகுந்த நம்பிக்கையை அளிப்பதாகவும், இது பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்றும் அமெரிக்க மருத்துவத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். விரைவில் மெர்க் நிறுவனம் அமெரிக்காவில் இந்த மாத்திரையை அவசர காலத்தில் பயன்படுத்த அனுமதி கோரி விண்ணப்பிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அனுமதி கிடைக்கும் பட்சத்தில் கொரோனா தொற்று பாதிப்பை தடுக்க வாய்வழி உட்கொள்ளும் வகையிலான முதல் மருந்தாக மால்னுபிராவிர் மாத்திரை இருக்கும். மாத்திரையின் ஆய்வுகூட முடிவுகள் நேர்மறையாக இருப்பது தெரியவந்த நிலையில் வெள்ளியன்று சந்தையில் மெர்க் நிறுவனப் பங்குகளின் மதிப்பு 12.3 வீதம் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வழங்கி வரும் மொடர்னா பங்குகளின் மதிப்பு 13 வீதம் அளவிற்கும், ஃபைசரின் பங்குகள் ஒன்று புள்ளி மூன்று வீதமும் சரிந்தன.
—————-
Reported by : Sisil.L