இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையிலான போர் 5 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், இரு தரப்பிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3000-ஐ கடந்துள்ளது.
நேற்றைய நான்காவது நாள் தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலில் 1,008 பேர் உயிரிழந்துள்ளனர். 3,418 பேர் காயமடைந்துள்ளனர்.
காஸாவில் 900 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 4,250 பேர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல் மண்ணில் 1500 ஹமாஸ் படையினரை இஸ்ரேல் இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 3,000-ஐ தாண்டியுள்ளது.
West Bank (மேற்கு கரை) பகுதியில் 21 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 130 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், காஸா எல்லைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
காஸா மீதான வான்வழித் தாக்குதலுடன் தரைவழி தாக்குதலையும் அதிகரிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இஸ்ரேல் இராணுவம் அதிகமான துருப்புகளை தெற்கு இஸ்ரேல் பகுதியில் நிலைநிறுத்தியுள்ளது. கனரக இராணுவத் தளவாடங்களுடன் ரிசர்வ் படைகளும் அழைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஹமாஸ் தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து, பல கொலைகள் நிகழ்ந்த காஸா எல்லைப்பகுதிகளின் கட்டுப்பாட்டை மீட்டுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதனிடையே, அமெரிக்காவில் இருந்து அதிநவீன ஆயுதங்களுடன் வந்த முதல் விமானம் இஸ்ரேலின் நேவடிம் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
ஆனால், விமானத்தில் அனுப்பப்பட்டுள்ள ஆயுதங்கள் குறித்த தகவலை இரு நாடுகளும் வெளியிடவில்லை.
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளும், ஹமாஸுக்கு சில இஸ்லாமிய நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் மக்கள் தங்களுக்கான பாதுகாப்பைத் தேடி காஸா பகுதியில் இருந்து அதன் அண்டை பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். பலர், ஐக்கிய நாடுகள் சபையினால் நிர்வகிக்கப்படும் பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
உணவு, எரிபொருள் மற்றும் மருந்துப்பொருட்கள் எவையும் உள்ளே செல்ல இயலாதவாறு காஸாவை இஸ்ரேல் முற்றுகையிட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டின் வடக்கு பகுதியில் ஹமாஸ் எதிர்த் தாக்குதல் நடத்தி வந்தது. சிரியா மற்றும் லெபனான் பகுதிகளில் இருந்தும் பாலஸ்தீன இராணுவம் தாக்குதல் நடத்தியது.
இலட்சக்கணக்கிலான இஸ்ரேல் மக்கள், ஹமாஸின் தாக்குதல் தொடங்கிய நாள் முதல் தங்கள் நாட்டுக்குள்ளாகவே இடம்பெயர்ந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Reported by :N.Sameera