‘காவிய நாயகன்’ திருப்பாடுகளின் நாடகம் நாளை ஆரம்பம்

திருமறைக் கலாமன்றம் தயாரித்து வழங்கும் பிரமாண்டமான அரங்க ஆற்றுகையான ‘காவிய நாயகன்’  திருப்பாடுகளின் நாடகம் நாளை 7 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் 10 ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு நாட்களுக்கு இல.238, பிரதான வீதி,யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற அரங்கில் மேடையேற்றப்படவுள்ளது.


வியாழன்,சனி,ஞாயிறு தினங்களில் மாலை 6.45 மணிக்கும் வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணிக்கும்  இவ்வாற்றுகை  ஆரம்பமாகவுள்ளது.

 
ஆண்டுதோறும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் திருமறைக் கலாமன்றத்தால் மேடையேற்றப்படும் இவ்வாற்றுகை கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மேடையேற்றப்படவில்லை என்பதுடன் கடந்த ஆண்டு ‘களங்கம்’ என்னும் பெயரில் சிறிய அளவில் மேடையேற்றப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


இவ்வாண்டு வழமை போல் பிரமாண்டமான அரங்க அமைப்பு,காட்சியமைப்பு,ஒலி,ஒளிபோன்றவற்றுடன் அரங்கிலும் அரங்கப் பின்னணியிலும் நூற்றுக்கும் அதிகமான கலைஞர்கள் இவ்வாற்றுகையில் பங்கேற்கின்றார்கள். திருமறைக்  கலாமன்றம்  தனது அனைத்து வளங்களையும் ஒருங்கிணைத்து மாபெரும் படைப்பாக தயாரித்தளிக்கும் இவ்வாற்றுகையை ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டு வருகின்றார்கள்.


திருமறைக் கலாமன்றத்தின் ஸ்தாபக இயக்குநர் அமரர் நீ.மரியசேவியர் அடிகளாரால் 2001 ஆம் ஆண்டில் முதன் முதலாக எழுதப்பட்ட ‘காவிய நாயகன்’ திருப்பாடுகளின் நாடகம், ‘மனிதம்’ என்ற தேடலுக்கு பதில் தரும் வகையில் அமைந்துள்ள இயேசுவின் வாழ்வில் அவர் ஒவ்வொரு  சந்தர்ப்பத்தையும், கட்டத்தையும்,சவாலையும் எவ்வாறு அணுகி மனிதத்தின் உச்சமாகவும்,எடுத்துக்காட்டாகவும் விளங்கினார் என்பதைக் கூற முனைகின்றது.’காவிய நாயகன்’ இதற்கு முன்னதாக 2001,2004,2008,2013 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் மேடையேற்றப்பட்ட போது நெறியாள்கையை நீ. மரியசேவியர் அடிகள், யோ.யோண்சன் ராஜ்குமார் ஆகியோர் மேற்கொண்டார்கள்.இம்முறை இதற்கான நெறியாள்கையை மன்றத்தின் நாடகப் பொறுப்பாளரும் பெண் அரங்கக் கலைஞருமான வைதேகி செல்மர் எமில் மேற்கொண்டுள்ளார்.இவர் 2014 ஆம் ஆண்டில் ‘வேள்வித் திருமகன்’ ஆற்றுகையை  நெறியாள்கை செய்து மிகுந்த வரவேற்பைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
——————-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *