தடுப்பூசி எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கனடாவையும் அமெரிக்காவையும் இணைக்கும் பாலத்தில் குவிந்திருந்த போராட்டக்காரர்களை கனேடிய பொலிசார் ஒரு வழியாக அகற்றியதைத் தொடர்ந்து, அந்தப் பாலத்தில் மீண்டும் போக்குவரத்து ஆரம்பமாகியுள்ளது.
கனடா – அமெரிக்காவுக்கிடையிலான சரக்குப் போக்குவரத்தில் 25 சதவீதம், கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள விண்ட்சர் என்ற இடத்தையும், அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்திலுள்ள Detroit நகரத்தையும் இணைக்கும் ‘Ambassador Bridge’ பாலத்தின் வழியாகத்தான் இடம்பெற்று வருகிறது.
கனேடிய சாரதிகள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும் என பெடரல் அரசு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், Ambassador Bridge பாலத்தின் கனேடிய பகுதியில் கனேடிய லொறிச் சாரதிகள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதனால், சுமார் 850 மில்லியன் டொலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்தப் பாலத்தில் போக்குவரத்துக்கு இடையூறு செய்வது சட்ட விரோதம் என நீதிபதி ஒருவர் தீர்ப்பளிக்க, பொலிஸார் பாலத்தில் இருந்த போராட்டக்காரர்களை அகற்றியதுடன், வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.அதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையிலான போக்குவரத்து மீண்டும் சீராகியுள்ளது.
அமெரிக்காவின் Detroit International Bridge Co என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், Ambassador Bridge என்னும் பாலம் தற்போது முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான போக்குவரத்தில் மீண்டும் தடையின்றி ஈடுபடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
————————-
Reported by : Sisil.L