கனடாவில் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பெருவெள்ளத்தால் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு மாகாண நிர்வாகம் உதவித்தொகையை அறிவித்துள்ளது.


பெரு வெள்ளத்தால் தங்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள மக்களில் தகுதியுடையவர்களுக்கு 2,000 டொலர் உதவித்தொகை வழங்க மாகாண நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


குறித்த தொகையானது கனேடிய செஞ்சிலுவைச் சங்கம் வாயிலாக தகுதியுடையவர்களுக்கு அளிக்கப்படவுள்ளது. மேலும், பாதுகாப்புக் கருதி வெளியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு, அவர்களின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள குறித்த தொகை உதவியாக இருக்கும் என அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் வீசிய புயலால் பாதிக்கப்பட்டு, தங்கள் குடியிருப்புகளில் இருந்து பாதுகாப்பு கருதி பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்ட மக்களே உதவித்தொகைப் பெற தகுதியுடையவர்கள்.


இதனிடையே, நன்கொடை அளிக்கக்கூடிய அனைத்து பிரிட்டிஷ் கொலம்பிய மக்களும் உரிய வகையில் உதவ முன்வர வேண்டும் என துணைப் பிரதமர் மைக் ஃபார்ன்வொர்த் கோரிக்கை விடுத்துள்ளார்.


அண்மைக்காலமாக நாம் பல பேரழிவுகளை எதிர்கொண்டு வருகிறோம் எனக் குறிப்பிட்டுள்ள மைக் ஃபார்ன்வொர்த், ஒவ்வொரு முறையும் நாம் ஒன்றாகப் போராடி அதை வெற்றி கண்டுள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிரிட்டிஷ் கொலம்பியாவின் வணிகர்கள் குழுவானது ஏற்கனவே 1 மில்லியன் டொலர் நன்கொடையாக அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2,000 டொலர் உதவித்தொகை பெறத் தகுதியுடையவர்கள் செஞ்சிலுவைச் சங்கத்திடம் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
———————-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *