கனடாவில் 50 ஆண்டுகளுக்குப் பின் அவசர நிலை பிரகடனம்

கனடாவில்  தடுப்பூசிக்கு எதிரான போராட்டம் வலுத்து வரும் நிலையில்  50 ஆண்டுகளின் பின்னர் முதல் முறையாக அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.


கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குச் செல்லும் லொறிச் சாரதிகள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் எனபதுடன்,    அமெரிக்காவில் இருந்து கனடா திரும்பும் லொறிச் சாரதிகளும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என கனடிய அரசாங்கம்  அறிவித்தது.


அதேபோல், அமெரிக்கா சென்று விட்டு திரும்பி வரும் லொறிச் சாரதிகள் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவர் என  கனடா அரசாங்கம்  தெரிவித்ததுடன் , கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளையும் அதிகரித்தது.


இதனிடையே, தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கனடாவில் லொறிச் சாரதிகள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


அந்த வகையில், போராட்டம் தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில், போராட்டத்தின் ஒரு பகுதியாக கனடா – அமெரிக்காவை இணைக்கும் முக்கிய பாலமான தி அம்பாசிடர் பாலத்தை போராட்டக்காரர்கள் முடக்கினர்.


இதன் காரணமாக லொறிகள்  பாலத்தில் நிறுத்தப்பட்டதால் கனடா – அமெரிக்கா இடையேயான போக்குவரத்து தடைப்பட்டது. அதன் பின்னர், பொலிஸார் அப்பகுதிக்கு விரைந்து சென்று தி அம்பாசிடர் பாலத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறிகளை வெளியேற்றினர்.


இதனால், கனடா – அமெரிக்கா இடையேயான போக்குவரத்து சீரானது. இந்நிலையில், லொறிச் சாரதிகளின் போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதால் கனடாவில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ  நாட்டில் அவசர நிலையைப் பிறப்பித்தார். 50 ஆண்டுகளுக்கு பின்னர் கனடாவில் பிறப்பிக்கப்படும் அவசர நிலை இதுவாகும். இதற்கு முன்னதாக 1980-ம் ஆண்டளவில் கனடாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.


தற்போது, அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், போராட்டங்களில் ஈடுபடுவோரின் வங்கிக் கணக்குகளை முடக்கவும் அரசுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.


அதேவேளை சட்டம்- ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டபோதும் நிலைமையைக் கட்டுப்படுத்த இதுவரை இராணுவம் களமிறக்கப்படவில்லை.


எனினும் அவசர நிலை பிரகடனத்தால் கனடாவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *