வெளிநாடு செல்லும் பயணிகளின் வசதிக்காக பாதுகாப்பு நடைமுறைகளை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய புறப்படும் முனையத்தின் நுழைவு வாயிலுக்கு அருகில் இருந்த ஸ்கேனிங் இயந்திரத்தை அகற்ற தீர்மானித்துள்ளதாக அந் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், ஒவ்வொரு பயணியும் விமானத்தில் ஏறுவதற்கு முன் இரண்டு இடங்களில் சிறப்பு ஸ்கேன் இயந்திரத்தில் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அப்போது காணப்பட்ட பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக அகற்றப்பட்ட ஸ்கேனிங் இயந்திரம் நிறுவப்பட்டதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, அந்த இயந்திரம் உட்பட 03 ஸ்கேனிங் இயந்திரங்கள் மூலம் வெளிநாடு செல்லும் பயணிகளின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதால் பாரிய கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் அமைதியான சூழ்நிலை மற்றும் வெளிநாடுகளுக்கு பயணிக்கும் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 446 கெமராக்களில் இருந்து பெறப்படும் படங்கள் அடங்கிய பாதுகாப்பு CCTV கெமரா அமைப்புடன் கூடிய குழு ஒன்றின் ஊடாக பயணிகள் 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
சிவில் உடையில் விமான நிலையம் மற்றும் முப்படை வீரர்கள் அடங்கிய பாதுகாப்புக் குழுவும் புறப்படும் மற்றும் வருகை தரும் முனையங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.