கடமை நேரத்தில் திறன்பேசி (Smartphone) பாவனையை மட்டுப்படுத்துமாறு வட மாகாண சுகாதார உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல்

கடமை நேரத்தில் வைத்தியசாலை வளாகத்திற்குள் திறன்பேசிகளை (Smartphone) பாவிப்பதை  மட்டுப்படுத்துமாறு வட மாகாண சுகாதார சேவை பணிப்பாளரால் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு விசேட அறிவிறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

அண்மைக்காலமாக வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் கடமை நேரத்தில் அநாவசியமாக கையடக்கத்தொலைபேசி பாவனையில் ஈடுபடுவது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் த. சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

திறன்பேசி பாவனை கடமைசார்ந்த  செயற்பாடுகளின் சிலவற்றுக்கு அத்தியாவசியமாக காணப்பட்டாலும்,  உண்மையில் அவை கடமைக்கு இடையூறாக அமைவதாகவும், நோயாளர்களின் தனிப்பட்ட விடயங்களை பேணுவதனை சிக்கலாக்குவதாகவும், கவனச்சிதறல்கள் ஏற்படலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கையடக்கத்தொலைபேசி பாவனை காரணமாக நோயாளர்களுக்கு வழங்கும் சேவையில் பாதிப்பு ஏற்படுவதால் நோயாளர்களுக்கும் தீங்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் 
 த. சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

எனவே, கடமை ​நேரத்தில் சாதாரண தொடர்பாடல் தவிர ஏனைய விடயங்களுக்காக சமூக வலைத்தளங்களை பார்வையிடல், புகைப்படம் எடுத்தல், வீடியோ எடுத்தல் போன்றவற்றுக்கு கையடக்கத்தொலைபேசிகளை உபயோகிப்பதனை தவிர்க்குமாறு வட மாகாண சுகாதார பணிப்பாளர், வட மாகாணத்தின் வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார துறைசார் உத்தியோகத்தர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

Reported by:S.Kumara

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *