எந்தவொரு நோயாளியும் ஒட்சிசன் பற்றாக்குறையால் மரணிக்க அனுமதிக்கக் கூடாது என சுகாதார அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்தார். ஒவ்வொரு மருத்துவமனையிலும் கொவிட் நோயாளிகளுக்குத் தேவையான ஒட்சிசனை நாளாந்த அடிப்படையில் வழங்குவதை கண்காணிக்குமாறு ஹெகலிய ரம்புக்வெல சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் மருத்துவர் சஞ்சீவ முனசிங்க மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன ஆகியோருடனான கலந்துரையாடலின் போது அமைச்சர் ரம்புக்வெல பேசுகையில், ஒட்சிசனுக்கு பற்றாக்குறை இல்லை என்பதை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என விளக்கினார். தற்போது இலங்கையின் நாளாந்த ஒட்சிசன் உற்பத்தி கிட்டத்தட்ட 80 தொன் என்று குறிப்பிட்ட அமைச்சர், எனினும் தேவை மிகவும் அதிகமாக உள்ளது என்றார்.
இவ்வாறு நாளாந்த ஒட்சிசனை உற்பத்தி செய்வதைத் தவிர இலங்கையில் ஒரு ஒட்சிசன் சேமிப்பு வசதி மேலதிகமாக செயற்பட்டு வருகிறது. மேலும் இது போன்ற மற்றொரு சேமிப்பு வசதியை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து ஒட்சிசனை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் உறுதியளித்தார்.
———————–
Reported by : Sisil.L