ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றப்பட்டால் அது இலங்கைக்கு கிடைக்கும் நிதியுதவி மற்றும் ஒத்துழைப்புக்களுக்கு பாரிய சவாலாக அமையும்.” என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
பிவிதுறு ஹெல உறுமய அமைப்பின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக 2012ஆம் ஆண்டு முதல் பல பிரேரரணைகள் கொண்டு வரப்பட்டு அவை நிறைவேற்றப்பட்டுள்ளன. இருப்பினும் இம்முறை இடம்பெறும் 51ஆவது கூட்டத்தொடர் இலங்கைக்கு தீர்மானமிக்கதாகும்.இலங்கைக்கு எதிராக பிரத்தியேகமாக ஒரு பிரேரணையை கொண்டு வந்து அதனை நிறைவேற்றிக்கொள்ள அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளன.
2012,2013மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பிரேரணை கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இந்த பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டவுடன், அடுத்தக்கட்ட நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
ஆனால் இம்முறை மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பு நாடுகளில் பெரும்பாலான நாடுகளின் ஆதரவுடன் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டால் இலங்கைக்கு நிவாரணம் வழங்க அது ஒரு நிபந்தனையாக மாற்றியமைக்கப்படும். இதுவரை காலமும் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் அவதானம் செலுத்திய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இம்முறை பொருளாதார பாதிப்பு குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் முறையற்ற ஒருசில செயற்பாடுகளை சர்வதேசம் உன்னிப்பாக அவதானித்துள்ளது.
2021ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக 22 நாடுகளும்,எதிராக 11 நாடுகளும் வாக்களித்தன. 14 நாடுகள் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாமல் நடுநிலை வகித்தன.இலங்கைக்கு எதிரான பிரேணையில் உக்ரைன் ஆதரவாக வாக்களித்த போதும்,ரஷ்யா எதிராக வாக்களித்தது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் இலங்கை நடுநிலை வகித்தது. ஆகவே இம்முறை இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள பிரேரணையில் உக்ரைன் நடுநிலை வகிக்கும். 2021ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள் இன்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக உள்ளன.
Reported by :Maria.S