சட்டவிரோதமான முறையில் எரிபொருள் சேகரித்து அதிக விலைக்கு விற்கும் இடங்களை சோதனை செய்யும் பொலிஸ் அதிகாரிகளுக்கு வெகுமதிப் பணத்தை வழங்க பொலிஸ் மா அதிபர் தீர்மானித்துள்ளார்.
அதன் பிரகாரம், சோதனையின் மூலம் 100 முதல் 500 லீற்றர் எரிபொருள் கைப்பற்றப்பட்டால், அதிகபட்சமாக இரண்டு லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும். 500 முதல் 1,000 லீற்றர் எரிபொருளைக் கைப்பற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு அதிகபட்ச சன்மானம் ரூ.03 லட்சமாகும்.
1,000 லீற்றருக்கு மேல் எரிபொருளை சோதனையிட்டால் வழங்கப்படும் வெகுமதித் தொகை, உரிய விபரங்களுக்குப் பின் முடிவு செய்யப்படும் என்று பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் பரிசோதகர்கள் உள்ளிட்ட பொலிஸ் திணைக்களத் தலைவர்களுக்கு விடுத்துள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக எரிபொருட்களை சேகரித்து அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்வதை தடுத்து நிறுத்தவும், அது தொடர்பான சோதனையில் ஈடுபடும் அதிகாரிகளை ஊக்குவிக்கும் வகையிலும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பரிசுத் தொகையை 07 நாட்களுக்குள் வழங்கவும், முதல் கட்டமாக ஓகஸ்ட் 24 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தவும் உரிய சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
————
Reported by :Maria.S