ரஷ்யா, உக்ரைன் போர் 100ஆவது நாளை தாண்டிய நிலையில், இரு நாடுகளில் இருந்தும் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் இருக்கின்றன. இதனால் ஆபிரிக்க நாடுகள் உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் உணவுப் பஞ்சம் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு ரஷ்யா தான் காரணம் என மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் வளர்ந்து வரும் உலகளாவிய உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடிகளுக்கு மேற்கத்திய நாடுகள்தான் காரணம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் குற்றம்சாட்டினார்.
இது குறித்து பேசிய அவர், உலக உணவுச் சந்தையில் என்ன நடக்கிறது என்பதையும், அது சந்தித்து வரும் பிரச்சினைகளையும் ரஷ்யாவின் மீது திருப்புவதைக் காண முடிகிறது. மேலும், ரஷியாவுக்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் உலகச் சந்தைகளை மோசமாக்குவதுடன், உற்பத்தியைக் குறைத்து விலைகளை உயர்த்துகின்றன.
உக்ரைனில் இருந்து தானிய ஏற்றுமதியை ரஷ்யா தடுக்கவில்லை. ஆனால் மேற்கத்திய நாடுகள் உணவுப் பிரச்சினைகளுக்கு ரஷ்யாவை குற்றம் சாட்டி வருகின்றன. உக்ரைனில் இருந்து தானியங்களை ஏற்றுமதி செய்யும் கப்பல்களுக்கு பாதுகாப்பான பாதையை வழங்குவதற்கான சலுகைகளை எனது அரசாங்கம் வழங்கும் என புட்டின் கூறினார்.
——————-
Reported by:anthonippillai.R