உரிமைகளை அடக்கும் விடயங்கள் அவசரகால சட்டத்தில் இல்லை: நீதியமைச்சர் அலி சப்ரி

நாட்டின் மொத்த உள்நாட்டு தேவையில் 18 வீதம் தான் இங்கு உற்பத்தியாகிறது. 82 வீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. அதனை வியாபாரிகள் பயன்படுத்தி மக்களை சூறையாடுகின்றனர். இதனைக் கட்டுப்படுத்தவே ஜனாதிபதி அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுத்தார்.

 
எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுவது போல் மக்களின் அடிப்படை உரிமைகளை அடக்கும் விடயங்கள் எதுவும்  அவசர கால சட்டத்தில் இல்லை  என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை  இடம்பெற்ற  அவசரகால சட்டம்  மீதான விவாதத்தில்  உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர்  தொடர்ந்து  பேசுகையில், ஜனாதிபதி வெளியிட்டுள்ள பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் சரத்துகள் என்னவென்று தெரியாமல் எதிரணி பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. அத்தியாவசிய உணவுப்பொருட்கள் தொடர்பான சரத்தை   செயல்படுத்தி நியாய விலையில் பொருட்களை விநியோகிக்கவே  அவர் இதனை வெளியிட்டுள்ளார்.அதனை செய்ய வேண்டாமென்றா எதிரணி கோருகிறது?  இந்த சட்டத்தைப் பயன்படுத்தி மக்களின் உரிமைகளை தடுக்க முயல்வதாக எதிரணியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்தச் சட்டத்தில் அவ்வாறு ஏதாவது உள்ளதா? ஜனாதிபதியின் அறிவிப்பை தெளிவாக வாசிக்காமலே குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர். டொலரை கட்டுப்படுத்துமாறும் சம்பளத்தை  அதிகரிக்குமாறும் ஆசிரியர் சம்பளப் பிரச்சினையைத் தீர்க்குமாறும்  சகல ருக்கும் தடுப்பூசி வழங்குமாறும் எதிரணி கோருகிறது. ஏனைய நாடுகளைப் போன்று இந்தத் தொற்று நிலையிலிருந்து மீள எதிரணி ஒத்துழைக்க வேண்டும். அரசுக்கு வருமானம் கிடைக்கும் 3 வழிகள் உள்ளன. சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் 500 கோடி ரூபா வருமானம் கிடைத்தது. அது இன்று பூச்சியமாக மாறியுள்ளது. எதிரணி ஆட்சிக்கு வந்தால் இதனை மாற்ற முடியுமா? அந்நியச் செலாவணி குறைந்துள்ளது. உள்நாட்டில் வருமானம் கிடைக்கும்  கலால் வரி, வருமான வரி, சுங்க இறக்குமதி வரி என்பனவும் பெருமளவு குறைந்துள்ளன. இவற்றை அறிந்து கொண்டு 28 வருடங்களாக தீர்க்கப்படாத ஆசிரியர் பிரச்சினையைத் தீர்க்குமாறு கேட்கின்றனர். இதனை ஒரே இரவில்  தீர்க்க முடியுமா? கல்வி நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதால் பிள்ளைகள் பெரும் அழுத்தங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.  ஒன்லைன் முறையில் இருந்தும் ஆசிரியர்கள் விலகியுள்ளனர். இதனை எதிரணி அரசை அபகீர்த்திக்குட்படுத்த முயலக் கூடாது. மேலும் ஜனாதிபதியின் அறிவிப்பின் முதலாவது பகுதியில்  பொருட்கள் பதுக்கி வைத்திருந்தால் அவற்றைக் கைப் பற்றி நியாயமான விலைக்கு விற்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.இதனால் பாவனையாளர்கள் தான் நன்மை அடைவர். இதனைப் பயன்படுத்தி எவ்வாறு வேறு நோக்கங்களை நிறைவேற்ற முடியும்? நுகர்வோர் அதிகார சபையின் வாயிலாக இவற்றை செய்ய முடியாதா எனக் கேட்கின்றனர். ஆனால் உத்தரவாத விலை நிர்ணயித்து அதிக விலைக்கு விற்றால் வழக்கு தொடர மட்டுமே இதனால் முடியும். ஆனால், நடைமுறையில் இருக் கும்  இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. நாட்டின் மொத்த உள்நாட்டு தேவையில் 18 வீதம் தான் இங்கு உற்பத்தியாகிறது. 82 வீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. அதனை வியாபாரிகள் பயன்படுத்தி மக்களைச் சூறையாடுகின்றனர். இதனை கட்டுப்படுத்தவே ஜனாதிபதி அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுத்தார் என்றார்.
——————
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *