இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, மண்சரிவு ஏற்பட்டதால் 40 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளனர்.
அவர்கள் சுரங்கத்திற்குள் சிக்கி 72 மணித்தியாலங்கள் கடந்துவிட்ட போதிலும், அவர்களில் எவரும் இதுவரை மீட்கப்படவில்லை.
இதனால், சுரங்கத்திற்கு வௌியில் அவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தின் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
அந்தப் பாதையின் ஒரு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மண் சரிவு ஏற்பட்டது. இதனால் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டு வந்த சுரங்கப்பாதை சரிந்து விபத்திற்குள்ளானது.
பாதை சரிந்து இடிபாடுகள் குறுக்கில் இருப்பதால், அவற்றின் பின்னால் 40 தொழிலாளா்கள் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனா். சரிவுக்குள்ளான பகுதி 30 மீட்டா் நீளமானது என்று உத்தரகண்ட் மாநில அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
வெளிவரும் பாதையை தயார் செய்வதற்காக இயந்திரங்களை பயன்படுத்தி இடிபாடுகளை துளையிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும், நேற்று மாலை அந்த இயந்திரங்களும் சிக்கிக்கொண்டதால், அப்பணி இடைநிறுத்தப்பட்டது.
இந்நிலையில், தொழிலாளர்களை மீட்பதற்கு மீட்புப் படையினரிடம் மாற்றுத் திட்டங்கள் இல்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் விரைந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இராட்சத இயந்திரங்களை பயன்படுத்தி, இடிபாடுகளை அகற்றி வருவதாகவும் உத்தரகண்ட் மாநில பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளே சிக்கி இருப்பவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
பாதையில் உள்ள இடிபாடுகளை அகற்றினாலும், மேலிருந்து அதிகளவில் மண்சரிவு ஏற்படுவதால் மீட்பு பணிகள் தாமதமாகி வருகின்றன.
Reported by :S.Kumar