இளைஞனின் இறப்புக்கு நீதி தேவை

வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கடந்த 08 ஆம் திகதி சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, கலைவாணி வீதி, சித்தன்கேணி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு.நாகராசா அலெக்ஸ் என்னும் 26 வயது இளைஞன் பொலிஸாரின் அராஜகமான தாக்குதலால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் 19 ஆம் திகதி உயிரிழந்துள்ளமை தொடர்பில் நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமெனக் கோரி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இலங்கைப் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

பொலிஸாரின் கைது நடவடிக்கையில் தொடங்கி, மரணம் நிகழ்ந்தது வரையான சம்பவங்களை வரிசைப்படுத்தி, இளைஞனின் சாவுக்கு நீதியை வலியுறுத்திக்கோரும் அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பொருளாதார ரீதியாக நலிவடைந்த குடும்பப் பின்னணியைச் சேர்ந்த அப்பாவி இளைஞனான அலெக்ஸ், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த போதே வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் மிலேச்சத்தனமான தாக்குதல்களாலும், சித்திரவதைகளாலும் உயிரிழந்துள்ளார். 

எனினும் இது தொடர்பிலான விசாரணைப் பொறிமுறைகள் எவையும் இதுவரை முறையாகக் கைக்கொள்ளப்படாத நிலையில், விசாரணையின் தீவிரத் தன்மையையும், இறந்துபோன இளைஞனின் உறவுகளது கோபத்தையும் நீர்த்துப் போகச்செய்யும் வகையில், தாக்குதல் மேற்கொண்ட இரு பொலிசாருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை அநியாயமாகக் கொல்லப்பட்ட ஒரு அப்பாவி உயிரின் பெறுமதியை மலினப்படுத்துவதோடு, பொலிஸ் அதிகாரத்தனத்தின் வெளிப்பாட்டை மிகக்கோரமானதாகவும் பதிவு செய்திருக்கிறது.

எனவே இது விடயத்தில் தாங்கள் உயரிய கரிசனைகொண்டு, பொலிஸார் மீதான குற்றங்களை மறைத்து விசாரணையை மடைமாற்றும் வழக்கமானதும் நீதிக்குப்புறம்பானதுமான செயற்பாடுகளைத் தவிர்த்து, இறந்துபோன இளைஞனின் உயிரை எந்தப் பிரயத்தனங்களாலும் மீட்டெடுக்க முடியாத கையறு நிலையிலுள்ள அவ் இளைஞனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் முறையான விசாரணைகளை மேற்கொள்வதற்கும், உயிரிழந்த இளைஞனின் வாக்குமூலக் காணொலி, சட்ட மருத்துவ நிபுணரின் உடற்கூற்றாய்வு அறிக்கை என்பவற்றை சான்றாதாரங்களாகக் கொண்டு இக்கொலையோடு தொடர்புடைய குற்றவாளிகளை எந்தச் சமரசங்களுமற்றுத் தண்டிப்பதற்கும், இனியொருபோதும் இத்தகைய அசம்பாவிதங்கள் மீளநிகழாமையை உறுதி செய்வதற்கும் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனத் தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன் 

Reported By : S;Kumara

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *