இங்கிலாந்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின் போது பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அர்ப்பணிப்புடன் சிகிச்சை வழங்கிய இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பெண் மருத்துவர் நீச்சலில் ஈடுபட்ட வேளை உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இங்கிலாந்தின் மார்கேட் கடலில் மூழ்கி உயிரிழந்த இளம் தமிழ்ப் பெண் மருத்துவரின் இறுதிக்கிரியைகள் இடம்பெற்றுள்ளன. நண்பர்களுடன் இரவு நேர நீச்சலுக்குச் சென்ற திருஷிகா சத்தியலிங்கம், கடந்த 11ஆம் திகதி மார்கேட் கரையில் சடலமாகக் கரையொதுங்கினார்.
26 வயதுடைய திருஷிகா, சம்பவ தினத்தன்று தன் பெண் தோழிகளுடன் குறித்த கடற்கரைக்குச் சென்றுள்ளார். ஹோட்டலுக்கு தோழிகள் திரும்பிய நிலையில், அவர் திரும்பவில்லை. இது குறித்து தகவல் வழங்கப்பட்ட தையடுத்து, அதிகாலை 3 மணியளவில் அவரது சடலம் மீட்கப்பட்டது. அவர் எலிசபெத் மகாராணி மருத்துவமனையில் இளநிலை வைத்தியராக பணிபுரிந்து வந்துள்ளார். அவரது சகோதரன் கௌசல்யனும் அதே வைத்தியசாலையில் இளநிலை வைத்தியராகப் பணி புரிகிறார். இவரது தந்தை சத்தியலிங்கம் அதே வைத்தியசாலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். அவரைப் போலவே திருஷிகா மயக்க மருந்து நிபுணராக மாற விரும்பியிருந்தார்.
————