இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமாவையடுத்து கடந்த 14ஆம் திகதி முதல் வெற்றிடமாகிய ஜனாதிபதி பதவிக்காக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் அனுர குமார திசாநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர்.
1981ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான விசேட ஏற்பாடுகள் கட்டளைச் சட்டத்துக்கு அமைய, பாராளுமன்றத்தில் இன்று இதற்கான இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில் 223 எம்.பிக்கள் வாக்களித்தனர். 2 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று சமுகமளிக்கவில்லை. இதேவேளை செலுத்தப்பட்ட 223 வாக்குகளில் 4 வாக்குகள் செல்லுபடியற்றது என அறிவிக்கப்பட்டது.
இதில் ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார். ஏனைய வேட்பாளர்களான டலஸ் அழகப்பெரும 82 வாக்குகளையும் அனுரகுமார திசாநாயக்க 3 வாக்குகளையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
———————
Reported by :Maria.S