சென்னை துறைமுகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் நாளை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில் அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்டவை தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதனையடுத்து இலங்கை மக்களுக்கு அனுப்புவதற்காக அரிசி, பால் மா, மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவற்றை தயார் செய்யும் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. இந்தப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளை சென்னை துறைமுகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனைத்தும் கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட உள்ளது.
இதன்படி தமிழகத்தில் இருந்து 80 கோடி ரூபாய் மதிப்புள்ள 40 ஆயிரம் தொன் அரிசி, 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 500 தொன் பால் மா, 28 கோடி ரூபாய் மதிப்பிலான 137 வகையான உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் அடங்கிய கப்பல் நாளை இலங்கைக்கு புறப்படுகிறது.
———
Reported by : Sisil.L