பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 வருட சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன் இதன் மூலம் அவர் 5 வருடங்கள் செயற்பாட்டு அரசியலில் ஈடுபட தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அரசாங்க பரிசுகளை சட்டவிரோதமாக விற்று சம்பாதித்த பணத்தை கணக்கில் காட்டவில்லை எனும் குற்றத்திற்காக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றம் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.
குற்றச்சாட்டை மறுத்துள்ள அவர், தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்வதாக தெரிவித்துள்ளார்.
தீர்ப்பை தொடர்ந்து, இம்ரான் கான் லாஹூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்றம் அவருக்கு பாகிஸ்தான் ரூ. 100,000 (சுமார் இலங்கை ரூ. 150,000) அபராதமும் விதித்துள்ளது.
இம்ரான் கான் 2018 இல் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.
ஆனால் கடந்த வருடம் அவர் மீது பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பில் பதவி நீக்கப்பட்டார்.
இம்ரான் கான் ஏப்ரல் 2022 இல் பதவி நீக்கம் செய்யப்பட்டதில் இருந்து 100 இற்கும் மேற்பட்ட வழக்குகளை அவர் எதிர்கொள்கிறார். அவை அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகள் என்று அவர் கூறுகிறார்.
பல மாதங்களாக அவர் கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வந்த நிலையில், சில சமயங்களில் அவரது ஆதரவாளர்கள் அவரை கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் ஆர்ப்பாட்டப் பேரணிகளில் ஈடுபட்டனர்.
கடந்த மே மாதம், நீதிமன்றத்தில் ஆஜராகாததற்காக அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டமை சட்டவிரோதமானது என, உச்ச நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்தமை சட்டவிரோதம்; இம்ரான் கானை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
இம்ரான் கானுக்கு பிணை
வெளிநாடு செல்வதற்கு இம்ரான் கானுக்கு தடை
இம்ரான் கான் பதவி நீக்கம் செய்யப்பட்டதில் இருந்து, அடுத்த தேர்தலுக்காக மும்முரமாக பிரசாரம் செய்து வருகிறார்.
பாகிஸ்தான் நாட்டு சட்டத்தின் படி, இந்த தண்டனை காரணமாக இம்ரான் கான் செயற்பாட்டு அரசியலில் ஈடுபடுவதை தகுதி நீக்கம் செய்யும் என்பதோடு, மேலும் உள்ள வழக்குகளுக்கு அமைய, வாழ்நாள் முழுவதும் நீடிக்க வாய்ப்பை ஏற்படுதலாம்.
பாகிஸ்தானின் பாராளுமன்றம் ஓகஸ்ட் 09ஆம் திகதி கலைக்கப்படவுள்ளதோடு, தேர்தலையொட்டி தற்காலிக அரசாங்கம் அரசாங்கத்தை பொறுப்பேற்கவும் உள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம், தேர்தலானது நவம்பர் மாத ஆரம்பத்தில் நடைபெற வேண்டும் என்றாலும், பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி தேர்தல் திகதி எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Reported by :N.Sameera