அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற பல்வேறு நாடுகள் ஆப்கானிஸ்தானிலுள்ள தங்கள் சொந்த மக்களையும், தங்களுக்கு உதவிய ஆப்கானியர்களையும் மற்றும் அந்த நாட்டில் உள்ள பல மக்களையும் மீட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றி காத்திருக்கின்றனர். இதுபற்றி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியதாவது:
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து, சர்வதேச நாடுகள் தங்களது மக்களைத் திரும்ப அழைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தின. இங்கிலாந்து இந்தப் பணியைத் தீவிரப்படுத்தியது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானிலிருந்து மக்களை வெளியேற்றும் கடைசி இங்கிலாந்து விமானம் காபூலிலிருந்து புறப்பட்டது. அங்கிருந்து மக்களை வெளியேற்றும் பணிகளை நிறுத்திக் கொண்ட இங்கிலாந்து இராணுவ வீரர்கள் தாயகம் திரும்பத் தொடங்கினர். முதல் கட்டமாக காபூலில் இருந்து இராணுவ விமானம் மூலம் புறப்பட்ட 256 வீரர்கள் இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட்ஷைர்-ல் உள்ள இராணுவ தளத்திற்கு வந்தடைந்தனர்.
கடந்த 2 வாரங்களில் 15,000க்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து குடிமக்களை வெளியேற்றியதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
Reported by : Sisil.L