அமெரிக்காவில் ஒரே நாளில் 3 லட்சம் பேருக்கு கொரோனா

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.தற்போது உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. ஒரே நாளில் அமெரிக்காவில் 3 லட்சத்து 12 ஆயிரம் பேர் வரை கொரோனா தாக்கியுள்ளது. இதனால் அமெரிக்காவில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கலிபோர்னியா மாகாணத்தில்தான் இதன் பாதிப்பு அதிகளவு உள்ளது. கொரோனாவால் இதுவரை இங்கு 75 ஆயிரத்து 500 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக பாதிக்கப்படுபவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிகரித்த வண்ணம் உள்ளது. விடுமுறை கேளிக்கை நிகழ்ச்சி மற்றும் குடும்ப நிகழ்ச்சிகள் மூலம் கலிபோர்னியாவில் மட்டும் சுமார் 50 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்க சவுதி அரேபியா, போட்ஸ்வானா, சிம்பாம்ப்வே உட்பட பல நாடுகளில் இருந்து அமெரிக்கா வருவோருக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய ஊழியர்கள் பலருக்கு இத்தொற்று பரவியதால் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல தொழிற்சாலைகளில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் தொழில்களும் முடங்கியுள்ளன. இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அறிகுறியற்ற கொரோனா நோயாளிகளுக்கான கட்டுப்பாடுகளுக்கு அந்நாட்டு அரசு தளர்வு அளித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். தற்போது அது 5 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
5 நாட்களுக்குப் பிறகும் அடுத்த 5 நாட்கள் அவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து பிற இடங்களுக்குச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


பிரான்ஸ் நாட்டிலும் கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஊழியர்கள் வீடுகளில் இருந்தே பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. வாரத்தில் 3 நாட்கள் அவர்கள் கண்டிப்பாக வீடுகளில் இருந்து வேலை பார்க்க வேண்டும் என்றும், பெரிய நிறுவனங்களின் தொழிலாளர்கள் அலுவலகத்தில் தங்காமல் வெளியில் இருந்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

————–

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *