அடுத்த வாரம் அமெரிக்க திறைசேரியின் பிரதிநிதிகள் குழு ஒன்று இலங்கை வரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தக் குழு ரஷ்யா தொடர்பாக கலந்துரையாடாமல், இலங்கை தொடர்பாக மட்டுமே கலந்துரையாடும். இவ்வாறு இலங்கைக்கு பொருளாதார உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
நாட்டில் எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றுக்கு அப்பால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. வீழ்ச்சியடையும் வேகத்தைக் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அதற்கும் காலம் கடந்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு டொலர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்.
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தாமல் வேறு எந்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைக் காண முடியாது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அதேநேரம், அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது கட்டாயம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இந்தியாவின் உயர் மட்டக் குழு ஒன்றும் நாளைய தினம் இலங்கை வரவுள்ளது.
————
Reported by: Anthonippillai.R