சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன், பயன்படுத்தப்படும் விதம் தொடர்பில் கண்காணிப்பதற்கு குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளார்.
ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானி சாகல ரத்நாயக்க, நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோரின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த குழுவை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டை செயற்படுத்துதல், அதன் முன்னேற்றம் தொடர்பில் மாதாந்த அறிக்கை தயாரித்து அமைச்சரவைக்கு வழங்குதல் ஆகியன இந்த குழுவின் பிரதான கடமைகள் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள போதிலும், அவை உரிய முறையில் முகாமைத்துவம் செய்யப்படாததன் காரணமாக மக்களுக்கு சிறந்த பிரதிபலன்களைப் பெற்றுக்கொடுக்க முடியாமற்போயிருந்தது.
இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள ஜனாதிபதி, இம்முறை சர்வதேச நாணய நிதியத்தின் கடனை வினைத்திறனுடன் பயன்படுத்தப்படுவதை கண்காணிக்க இந்த குழுவை நியமிக்கத் திட்டமிட்டுள்ளார்.
Reported by :Maria.S