2026 வரவுசெலவுத்திட்டம்

2026 வரவுசெலவுத்திட்டம் நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் நாளை (07) பி.ப. 1.30 மணிக்கு சமர்ப்பிக்கப்படும்

🔸 வரவுசெலவுத்திட்ட விவாதம் நவம்பர் 8 முதல் டிசமபர் 5 வரை 23 நாட்கள் இடம்பெறும்
🔸 இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நவம்பர் 8 முதல் 14 வரை – இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 14 ஆம் திகதி பி.ப. 6.00 மணிக்கு
🔸 குழுநிலையின் போதன விவாதம் நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை – மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி பி.ப. 6.00 மணிக்கு

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டை (வரவுசெலவுத்திட்ட உரை/ வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்தல்) நாளை (07) பி.ப. 1.30 மணிக்கு நிதி விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் கௌரவ ஜனாதிப அனுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.

அதனையடுத்து ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான முழுமையான விவாதம் (வரவுசெலவுத்திட்ட விவாதம்) 2025 நவம்பர் 8 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

2025 செப்டம்பர் 26 ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நவம்பர் 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை 6 நாட்கள் இடம்பெறும். அதன்பின்னர் நவம்பர் 14 ஆம் திகதி பி.ப. 6.00 மணிக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெறும்.

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலையின் போதன விவாதம் நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை 3 சனிக்கிழமை தினங்கள் உள்ளடங்கலாக 17 நாட்கள் நடைபெறவுள்ளது. அதனையடுத்து ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி பி.ப. 6.00 மணிக்கு இடம்பெறும்.

இக்காலப்பகுதியில் அரசாங்க விடுமுறைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர சனிக்கிழமை உள்ளிட்ட ஏனைய அனைத்து நாட்களிலும் வரவுசெலவுத்திட்ட விவாதம் இடம்பெறும். அத்துடன், குழுநிலை விவாதம் நடைபெறும் காலப்பகுதியில் திங்கட்கிழமைகளில் மு.ப 9.30 மணிக்கும், ஏனைய நாட்களில் மு.ப 9.00 மணிக்கும் பாராளுமன்றம் கூடவுள்ளது.

அதற்கமைய, இக்காலப் பகுதியில் ஒவ்வொரு நாளும் நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு மேலதிகமாக வாய்மூல விடைக்கான ஐந்து கேள்விகள் மற்றும் நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்வி ஒன்றுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இக்காலப் பகுதியில் பி.ப 6.00 மணிவரையும் வரவுசெலவுத்திட்ட விவாதத்தை நடத்துவதற்கும், வாக்கெடுப்பு நடத்தப்படும் தினங்கள் தவிர்ந்த ஏனைய தினங்களில் பி.ப 6.00 மணி முதல் 6.30 மணிவரையான காலப்பகுதி ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிக்கு 50:50 என்ற அடிப்படையில் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைகள் தொடர்பான விவாதத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் உத்தியோகபூர்வ தகவல் செய்தித்தளம்

.